ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பாஜக எம்எல்ஏ தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் தொகுதியின் பாஜக சார்பில் பராக் ஷா என்பவர் எம்எல்ஏவாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சில போக்குவரத்து விதி கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சட்டவிரோத நடைபாதையில் வியாபாரிகளுக்கு எதிராகவும் கடந்த சனிக்கிழமை மகாத்மா காந்தி சாலையில் போராட்டம் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது, அந்த சாலையில் ஒருவழி பாதையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து கொண்டு இருந்தார். இதனை கண்ட போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், அந்த ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததை பார்த்த பாஜக எம்எல்ஏ பராக் ஷா, அங்கு வந்து அந்த ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பராக் ஷாவை எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.