ஆரம்ப காலத்தில் மகளின் நிதி பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வரதட்சணை, தற்போது மணமகன் மற்றும் அவரது பெற்றோரால் கட்டாயமாக பெறக்கூடிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. பெண்களுக்கு எதிராக பல உயிர் வாங்கும் இந்த வரதட்சணை 1961, மே 1-ந் தேதி முதல் வரதட்சணைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும், இந்தச் சட்டத்தால், வரதட்சணைக் கொடுமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்ததோ தவிர இன்றும் பல உயிர்களை காவு வாங்கிக்கொண்டேதான் உள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவின் எக்கோடெக்-3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜல்புரா கிராமத்தில் தீபிகா என்ற 24 வயது பெண்ணுக்கும், ரித்திக் என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தீபிகாவின் குடும்பத்தினர் ₹1 கோடி ரொக்கம் மற்றும் ஒரு சொகுசு ஃபார்ச்சூனர் எஸ்யுவி கார் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்துக் கோலாகலமாகத் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஆனாலும், ரித்திக் மற்றும் அவரது தந்தை மனோஜ் ஆகியோரின் வரதட்சணை ஆசை அடங்கவில்லை. திருமணத்திற்குப் பிறகும் தீபிகாவைத் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் அச்சுறுத்தல்கள் மற்றும் கொடுமைகளால் மனமுடைந்த தீபிகா, நேற்று மே 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீபிகாவின் உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் பல கடுமையான காயங்கள் கண்டறியப்பட்டன. அவர் இறப்பதற்கு முன்பு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த அடையாளங்கள் காட்டுவதாகப் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. மகளின் மரணத்தால் நிலைகுலைந்து போன தீபிகாவின் தந்தை, காவல் நிலையத்தில் அளித்த எழுத்துப்பூர்வப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக முயன்ற கணவர் ரித்திக் மற்றும் மாமனார் மனோஜ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்:e – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.