சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியவர் மேலும் வரலட்சுமிக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் ‘எங்க அம்மா எங்களை விட்டுட்டு போய்ட்டாங்க…’ என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி ரூ.20 லட்சம் நிவாரணம் பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், பலியான வரலட்சுமி பணியாற்றிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் அவரது கணவருக்கும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.