உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நேற்று நடைபெற்ற பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) ஜிடி கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புத் தேர்வின்போது சர்வர் செயல்படாததால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்கள் அமளி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரை அடுத்த மகாராஜ்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பூர்வாமீரில் உள்ள ஸ்ரீமதி ராம்கலி இக்பால் பகதூர் ஆன்லைன் மையத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆன்லைன் மையத்தில் இருக்கும் இடத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தேர்வர்கள் தேர்வு எழுத அழைக்கப்பட்டதால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலே இதற்குக் காரணமாக அமைந்தது. இரண்டாவது ஷிப்டில் தேர்வு எழுதவிருந்த தேர்வர்கள் மையத்திற்கு வரத் தொடங்கியதும் நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்தக் கூட்ட நெரிசலும் அமளியும் தேர்வர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, அவர்கள் கான்பூர்-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையை மறிக்க முயன்றனர். நிலைமை மோசமடைந்ததால், மையத்தில் இருந்த SSC ஊழியர்கள் இரண்டு தேர்வு ஷிப்டுகளையும் உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மேலும்46 டிகிரி செல்சியஸ் சுட்டெரிக்கும் வெயிலில், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 100 கி.மீ. பயணம் செய்து வந்தும் சர்வர் செயல்படாததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது எனக் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் அமளியில் ஈடுபட்டதால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.