திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறிய 2 தங்கும் விடுதிகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தது மட்டுமின்றி அனுமதி பெறாமலும், முறையாக ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வரும் 200-க்கும் மேற்பட்ட விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ‘ஹோம் ஸ்டே’ என்ற பெயரில் வீடுகளை தங்கும் விடுதியாக சிலர் மாற்றியுள்ளதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து, அனுமதியின்றியும், சட்ட விரோதமாக இயங்கும் விடுதிகளை அடையாளம் காண வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, காவல்துறை உட்பட அனைத்து துறைகள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த குழு கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், இன்று கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் 2 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் பாபு தலைமையிலான அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்த விடுதிகளை பூட்டி ‘சீல்’ வைத்தார். மேலும், கொடைக்கானலில் அனுமதி பெறாமலும், முறையாக ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வரும் 200-க்கும் மேற்பட்ட விடுதிகள் கண்டறியப்பட்டு அந்த விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருகின்றது.