தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் அங்கன்வாடியில் குழந்தைகளை கோணிப்பையால் மூடி அச்சுறுத்திய பெண் ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய தென்காசி ஆட்சியர் ரஞ்சித்சிங் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் வென்னிமலை மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், தங்களது குழந்தைகளை அடிப்படை கல்வி கற்க அனுப்பி வைக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று அங்கன்வாடிக்கு வந்த குழந்தைகள் இடைவிடாமல் அழுதபடி இருந்தன.
இதனால் அங்கு பணியிலிருந்த பெண் ஊழியர் ஒருவர் ஆத்திரப்பட்டு குழந்தைகளை அதட்டியதோடு, அவர்களை மிரட்ட பிளாஸ்டிக் கோணிப்பையால், அந்தக் குழந்தைகளை கடத்துவது போல் மூடியுள்ளார். இதனால் அந்த குழந்தைகள் இன்னும் பீதியடைந்து அலறத் தொடங்கியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சில பெற்றோருக்கு தகவல் தெரிய வரவே, ஆட்சியரிடம், அங்கன்வாடி பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதையடுத்து தென்காசி ஆட்சியர் ரஞ்சித்சிங், அங்கன்வாடி மையத்தின் பெண் ஊழியரை நேற்று ‘பணியிடை நீக்கம்’ செய்து உத்தரவிட்ட நிலையில் அவரை கைது செய்தனர்.