திருவண்ணாமலையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தோழியுடன் கடந்த 31-ந் தேதி இரவு பவுர்ணமியன்று கிரிவலம் சென்றார். திருநேர் அண்ணாமலை கோயில் அருகே செல்லும்போது பியூட்டிசியன் கால் வலியால் நடக்க முடியாததால் நண்பரை வரவழைத்து அவருடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அத்தியந்தல் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை பகுதியில் பியூட்டிசியன் பைக்கை வழிமறித்துள்ளனர். பின்னர் வாலிபரை அடித்து விரட்டி விட்டு, பியூட்டிசியன் அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட நகைகளை பறித்துள்ளனர். பிறகு அவரை நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தங்களுடைய நண்பர்கள் சிலரையும் அங்கு வரவழைத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் இளம்பெண்ணை நிர்வாணமாக அமர வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த இளம்பெண், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தை சேர்ந்த திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ள வாசுதேவன் என்பவரை நேற்று கைது செய்து விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்களான அடையூரை சேர்ந்த ஆகாஷ், பெரியபாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அஸ்வநாதசுரணை பகுதியை சேர்ந்த அப்பு, லேலே என்கிற அரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தை சேர்ந்த அருண்குமார், பாவாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் என்கிற சூர்யா ஆகிய 7 பேரை நேற்று மாலை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் அனைவரையும் மகளிர் கோர்ட் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, 6 பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், 25க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.