கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் 39 பேருக்கு நிதியுதவி வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் சனிக்கிழமை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதிக ரூர் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் சென்னை வடக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு (எல்&ஓ) கூடுதல் காவல்துறை ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 5-ந் தேதி கரூர் வந்த இக்குழுவினர், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த தவெக நிர்வாகிகள் 2 பேரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை CBI-க்கு மாற்றி கடந்த 13-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, IPS அதிகாரி பிரவீண்குமார் தலைமையிலான CBI அதிகாரிகள் கடந்த 16-ந் தேதி இரவு கரூர் வந்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே, இந்தச் சம்பவத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் சார்பில் தலா ரூ.2.50 லட்சம், மநீம சார்பில் தலா ரூ.1 லட்சம், விசிக சார்பில் ரூ.50 ஆயிரம் என பல்வேறு கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவியை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து, அங்கு அவர்களுக்கு விஜய் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விஜய் வருகை தள்ளிப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இறந்த 41 பேரில் 39 பேருக்கு மட்டும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மீதம் 2 பேர் இறந்த பிரித்திக், சந்திரா ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இவர்களது மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பிரித்திக்கின் தந்தை பன்னீர் செல்வம் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
ஆனால் அவர் தன்னை பிரிந்து சென்று 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பணத்திற்காக இந்த வழக்கை போட்டுள்ளார் என சிறுவனின் தாய் ஷர்மிளா எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வீடியோ மூலம் ஆஜரானார். சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் கரூர் மாவட்ட தவெகவினரை தொடர்பு கொண்டு என் பெயரிலேயே செக் போட்டுக் கொடுங்கள் என தொந்தரவு செய்வதாகவும் ஷர்மிளா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
அது போல் சந்திராவின் கணவர் செல்வராஜுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கையெழுத்து வாங்கி அவர் பெயரில் போலியாக வழக்குத் தொடுத்ததாக கூறியும் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் செல்வராஜும் வீடியோ மூலம் ஆஜரானார்.இவர்களது மனுக்கள் போலி என தெரியவந்தால் அது குறித்து CBI விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.