உரிய இடத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். நீங்க ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க உங்க வேலையை பாருங்க.. நான் உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என்று பதில் சொல்ல இந்த சம்பவம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில்தான் நேற்று இரவு கோயம்புத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று உரிய இடத்தில் நிறுத்தப்படாமல் இருந்ததை பார்த்த அமைச்சர் சிவசங்கர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் இது பற்றி கேட்டுள்ளார். வந்து இருப்பது போக்குவரத்து அமைச்சர் என தெரியாமல் டிரைவரும் கண்டக்டரும் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளனர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரில் அரியலூர் நோக்கி சென்றுள்ளார். செல்லும் வழியில் கரூர் – மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி அமைச்சர் சா. சி. சிவசங்கர் டீ குடித்துள்ளார்.
அப்போது, அந்த உணவகத்தில் அரசு பேருந்து ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பயோ பிரேக் மற்றும் உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். இதைப்பார்த்த சா. சி. சிவசங்கர் தனியாக சென்று அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
உரிய இடத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று கேட்டு இருக்கிறார். அவரை அடையாளம் கண்டு கொள்ளாத ஓட்டுநரும், நடத்துநரும், நீங்க ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க உங்க வேலையை பாருங்க என்ற தொனியில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரும் பதிலளிக்க, உடனே சா. சி. சிவசங்கர், நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா ? எனக் கேட்டுள்ளார்.
நீங்க யாருன்னு தெரியவில்லையே என ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பதிலளித்துள்ளனர். நான் வேறு யாரும் இல்லை. உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என்று கூறியிருக்கிறார். இரவு வேளையில் அமைச்சர் திடீர் ஆய்வு அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.