மதச்சார்பின்மை – சமூகநீதி காக்கும் களத்தில் உறுதியாய் நிற்கும் அண்ணன் அவர்களின் சமூக – அரசியல் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்! வாழ்க பல்லாண்டு! என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நேற்றிரவு திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இந்த விழா மேடைக்கு வந்த தொல் திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்ற மதச்சார்பின்மை காப்போம் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் மதச்சார்பின்மை காப்போம் தலைப்பிலேயே ஊடக அரங்கமும் நடைபெற்றது.
இதையடுத்து, இரவு நடை பெற்ற வாழ்த்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் MP., தமிழ்நாடு பாடநூல் ச் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அடித்தட்டு மக்கள் வாழ்வினை உயர்த்த அன்றாடம் ஒலிக்கும் சமத்துவக் குரல் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் உரிமை முழக்கத்தையும், ஒடுக்கப்பட்ட – விளிம்புநிலை மக்களின் லட்சிய வேட்கையையும் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் அம்பேத்கர் – பெரியாரின் கொள்கை வார்ப்பு. பாசிசத்தை எதிர்க்கின்ற போரில் நம் தலைவர் அவர்களுடன் தோளோடு தோள் நிற்கும் தோழர். மதச்சார்பின்மை – சமூகநீதி காக்கும் களத்தில் உறுதியாய் நிற்கும் அண்ணன் அவர்களின் சமூக – அரசியல் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்! வாழ்க பல்லாண்டு! என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.