காவல்துறை என்னை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தால் தப்பியோடினேன் என ஆம் ஆத்மி MLA ஹர்மீத் பதன் மஜ்ரா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப்பேரவைத் தொகுதி MLA ஹர்மீத் பதன் மஜ்ரா மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.
இதன்பேரில் பாட்டியாலா சிவில் லைன்ஸ் காவல்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 2-ந் தேதி கர்னால் பகுதியில் MLA ஹர்மீத் பதன் மஜ்ராவை கைது செய்தனர். கர்னால் காவல் நிலையத்துக்கு ஹர்மீத் பதன் மஜ்ராவை அழைத்து சென்றபோது அவரும் அவரது கூட்டாளிகளும் காவல்துறை மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சூழலில் அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், 8 காவல் கண்காணிப்பாளர்கள், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5 ஆய்வாளர்கள் , என்கவுன்ட்டர் காவல் அதிகாரி விக்ரம் பிரார் ஆகியோர் என்னை கைது செய்தனர். கர்னால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்பிறகு என்னை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் காரணமாகவே காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடினேன் என ஹர்மீத் பதன் மஜ்ரா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.