சேலம் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 கோட்டங்களில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அன்றாடம் சுமார் 2 லட்சம் மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். ஆகமொத்தம் ஏறத்தாழ 15 லட்சம் மக்களுக்கு மேல் நாள் தோறும் குடிநீர் தேவைப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பின், மதராஸ் மாகாண காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்களால் நங்கவள்ளி – சேலம் குடிநீர் திட்டம் 1952-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோதனை முறையில் தொடங்கப்பட்டு, 1953-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் மாநகர மக்களுக்கு நாள் தோறும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்தது.
அதன் பிறகு சேலம் – மேட்டூர் பிரத்யேக குடிநீர் திட்டம் 2010-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் சேலம் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.320.54 கோடி மதிப்பீட்டில் இந்த பிரத்யேக குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேட்டூர் தொட்டியபட்டி தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு 1500 லட்சம் லிட்டர் குடிநீர் நாள் தோறும் பெறப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில் 3500 தெருக்களில் 1.25 லட்சம் குடிநீர் இணைப்புகளும் 846 கிமீ குடிநீர் பகிர்மனை குழாய்களும் 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அமைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் மாநகராட்சி சார்பில் வழங்கி வருகிறது. மக்கள் வரி பணத்தில் அத்தனை கட்டமைப்புகளையும் செயல்படுத்தி வரும் அரசு தற்பொழுது சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு 25 ஆண்டுக்கு 3259.73 கோடி ரூபாய்க்கு SUEZ (சுயேஸ்) எனும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சுயேஸ் அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சுயேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத ஜனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோயம்புத்தூர் நகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுயேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சுயேஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்கு தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்?. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தை சிறப்பாகச் செய்ய முடியும் என்றால்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் ஏன் செய்ய முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.
பொலிவியாவில் 1999-2000 காலகட்டத்தில் உலக வங்கியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு கொச்சபம்பா நகர நகராட்சி, தனது குடிநீர் விநியோகத்தை அகுவாஸ் டெல் துனாரி என்னும் பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரை வார்த்தது. அகுவாஸ் டெல் துனாரி நிறுவனம் பொறுப்பேற்றவுடன், குடிநீர் கட்டணங்கள் ஏழை எளிய மக்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்குப் பல மடங்கு உயர்த்து மட்டுமின்றி மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதற்குக் கூடக் கட்டணம் விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொலிவிய மக்கள், தங்களின் அடிப்படை உரிமையான தண்ணீருக்காக வீதியில் இறங்கி “நீர் யுத்தம்” நடத்தியத்தின் விளைவு பொலிவியா அரசு அகுவாஸ் டெல் துனாரி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என்பது வரலாறு. எனவே அரசு தனது கடமையிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு தனியாரிடம் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மக்களின் குடிநீர் உரிமையை தனியாரிடம் வழங்குவது மோசமான போக்கு.
ஆகவே தமிழக அரசு குடிநீர் விநியோகம் சூயஸ் நிறுவனம் வழங்க ஒப்பந்தத்தை சேலம் மாநகர மன்றத்தில் முழு எதிர்ப்பு வந்த போதும் மாநகர ஆணையர் ஒப்பந்தம் கையெழுத்து செய்து இருப்பது எதேச்சதிகாரம். ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சுயேஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.