தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சமீபத்தில் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக சட்டசபை வரலாறு காணாத வகையில் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது.
இதில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியம் 30,000, மாதாந்திரப்படி 10,000, தொகுதிப்படி 25,000, அஞ்சல் படி 2,500, தொலைபேசி படி 7,500 மற்றும் தொகுப்பு படி 5,000 ஆகியக் கூறுகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடரும் நிலையில் தொகுதி முழுவதும் பயணம் செய்வதற்கான செலவுகளை ஈடுகட்ட, இதுவரை ₹25,000 ஆக இருந்த வாகனப் படி தற்போது 75,000 ஆக உயர்த்தப்படுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கையாள்வதற்கு உதவியாளர் நியமனத்திற்காகப் புதிதாக 25,000 உதவியாளர் படி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த மாத வருமானம் ₹1,05,000-லிருந்து ₹1,80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது? ஒரு மாதத்தில் நிதி நிலை சரியாகி விட்டதா என்று ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் ஒலிக்கும் கேள்வியாக உள்ளது. மேலும் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவரால் கார் வாங்க முடியாதா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.