தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் நடைபெறாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் மனைவி வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது எப்படி? என சக ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சென்னை அடுத்த பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக சிடிஆர் நிர்மால்குமாரின் மனைவி பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது சிடிஆர் நிர்மல் குமார் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் அவருக்கு இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அவரது மனைவி பள்ளிக்கு சென்று வர சிரமம் ஏற்பட்ட நிலையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன சர்ச்சை என விசாரித்த போது தான் சில தகவல்கள் கிடைத்தது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இதற்காகவே எமிஸ் தளம் செயல்பாட்டில் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் நீதிமன்ற உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய நிர்மல் குமாரின் மனைவிக்கு மட்டும் திருவல்லிக்கேணி அரசு லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.
அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே அவர் பணியாற்றிய மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களும் இங்கு குறைவாகவே உள்ளது. இதனால் ஆசிரியர்கள் கூடுதல் வகுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது அமைச்சரின் மனைவி வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அந்த பணியிடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சக ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதோடு மாணவர்களுக்கும் வகுப்படுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அமைச்சரின் மனைவி என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் பணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்களுக்கும் பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.