எந்தவொரு கொள்கையும் இன்றி ஏதோ விபத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என தருமபுரியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தருமபுரியில் இன்று நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மாற்றுக் கட்சியினரை அதிமுகவுக்கு வரவேற்றார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,, “எந்தவொரு கொள்கையும் இன்றி ஏதோ விபத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருக்கப்போவது இல்லை. அப்படி ஆட்சியில் இருந்தால் தமிழகத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும்” என மிகக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், “நான் முதல்வராக இருந்த 4 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். தற்போது தமிழக மக்கள் தத்தளிக்கிறார்கள். அமைச்சரவையில் 3 பேர் மட்டும் தான் பேசுகிறார்கள். அதுவும், கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது.

மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை. இப்படித்தான் 100 நாள் ஆட்சி இருக்கிறது. ஜனநாயகன் படம் அப்படி இப்படி இருக்கும் என ரீல்ஸ் போட்டாங்க. ஆனால் ஒரே வாரத்தில் காத்து வாங்குது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும் இருக்கிறது. மேலும், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பேசுவதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் தவெக அரசை விமர்சனம் செய்தார். “இதுதான் தவெக ஆட்சியின் லட்சணம். கரண்ட் இப்படித்தான் போயிட்டே இருக்கும். இதைப் போலவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பம்புசெட்டிற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம்.” என தெரிவித்தார்.