நாடு முழுவதுமே அரசு வேலை என்பது பலரது வாழ்நாள் கனவு. தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே அரசு வேலை கிடைக்குமே தவிர MGR நடிப்பில் உருவான ” மகாதேவி ” என்ற படத்தில், குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்… குருட்டு உலகமடா _ இது… கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்… திருட்டு உலகமடா _ தம்பி… தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்… திருந்த மருந்து சொல்லடா என்ற பாடல் வரிகளைப் போல அமைச்சரைத் தெரியும் என்று சொல்லும் புரோக்கர்கள் மற்றும் நமக்கு எவ்வளவுதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் அது நிச்சயம் மோசடி என்பதை மக்கள் உணர வேண்டும்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிளியனூரை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கு கடலூர் வில்வநகரைச் சேர்ந்த பெண் தோழி உள்ளார். இவர்கள் 2 பேரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பயின்றவர்கள். பழைய நட்பு என்ற ரீதியில் அப்பெண்ணிடம் ராஜதுரை பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை மீது தீராத ஆசை இருப்பதையும் ராஜதுரை தெரிந்து கொண்டு கடந்த 2023-ஆம் ஆண்டு, தமிழக வேளாண் துறையில் வேளாண் அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியானபோது, ராஜதுரை உடனே அந்த ஆசையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
“எனக்கு வேளாண் அமைச்சரைத் தனிப்பட்ட முறையில் தெரியும், பெரிய இடத்து தொடர்பு இருக்கிறது” என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். “தேர்வு எழுதினால் மட்டும் போதும், முடிவு வரும்போது நீங்கள் தேர்ச்சி பெற்றதாக லிஸ்ட்டில் பெயர் வரும்படி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ராஜதுரை சொன்னதை உண்மை என்று நம்பிய மொத்தம் 10 லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக அந்தப் பெண், 5 லட்சம் பணத்தை ராஜதுரையின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், தேர்வு முடிவுகள் வெளியானபோது அந்த பெண்ணின் பதிவு எண் பட்டியலில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜதுரையைக் கேட்டபோது, முறையான பதில் அளிக்காமல் காலம் கடத்தியதோடு, பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தனது உழைப்பு வீணானதை உணர்ந்த அந்தப் பெண், துணிச்சலுடன் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி தீவிர விசாரணை நடத்தியபோது, ராஜதுரை அந்தப் பெண்ணை மட்டும் ஏமாற்றவில்லை என்பது தெரியவந்தது.
அதாவது கடலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 9 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி, சுமார் 24 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்டுள்ளதும் அம்பலமானது. தோழி காவல்துறைக்கு போனதுமே ராஜதுரை தலைமறைவு ஆகிவிட்டார். எனினும் தலைமறைவாக இருந்த ராஜதுரையை காவல்துறையினர் தீவிரமாக தேடி, அதிரடியாகக் கைது செய்தனர். ராஜதுரை மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்டும் கந்துவட்டிக்காரர்களைப் போல, மோசடி பேர்வழிகள் இன்று சந்து பொந்துகளில் எல்லாம் முளைத்துவிட்டனர். போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.