ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் டாலர் மதிப்பில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறிதென் மாவட்டங்களில் பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக மதுரை அருகே 12 பேரை கைது செய்த போலீஸார் அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகிலுள்ள கட்டடையன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித். வெளிநாட்டில் வேலை செய்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பினார். இவரும், இவரது நண்பர் அருணும் ஆன்லைன் செயலி மூலம் எப்.க்யூ.எல் மற்றும் வி.ஜே என்ற பெயரில் முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தனர். ஒரு செயலியில் ரூ.50 ஆயிரமும், மற்றொரு செயலியில் ரூ.1 லட்சமும் முதலீடு செய்தால் அத்தொகை டாலர்களாக மாற்றப்படும். செல்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ள செயலிக்கு 3 முறை வரும் குறுந்தகவலை `க்ளிக்’ செய்வதால் டாலரின் மதிப்பு அதிகரிக்கும் என்று கூறினர்.

இதை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இதற்கு எவ்வித ரசீதும், ஆதாரமும் கிடையாது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தி இணைந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 20-ந் தேதிக்கு முன்னதாகவே இந்த செயலி முதலீடுக்கான இணைப்பு திடீரென தடைப்பட்டது. ரஞ்சித், அருண் ஆகியோர் தலைமறைவானதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் கட்டையன்பட்டியில் ரஞ்சித் வீட்டை பலரும் முற்றுகையிட்ட நிலையில் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல்துறை அறிவுறுத்தலின்பேரில் பாதிக்கப்பட்டோர் மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சைபர் குற்றப்பிரிவு மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டோர் புகார் கொடுத்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் நேற்றைய முன்தினம் மாலை மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கலைந்து போகச் செய்தனர். மற்றொரு குழுவினர் கட்டையம்பட்டியிலுள்ள ரஞ்சித் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் மீது கற்களை வீசி வீட்டைச் சேதப்படுத்தினர். அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த முதலீட்டாளர்களும் நேற்றைய முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.