பெண்ணை கொலை செய்து சூட்கேசில் வைத்து ரயிலில் அனுப்பிய சம்பவத்தில் தொடர்புடைய, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவியை கூடுவாஞ்சேரி தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஆக்ரா ரயில் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பக்க பெட்டியில் சிவப்பு நிற சூட்கேசில் தலை இல்லாமல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்த மனித உடலை, ஆக்ரா ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சென்னையில் இருந்து சூட்கேசில் மனித உடலை வைத்து அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்ரா ரயில்வே காவல்துறையினர், சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு ஆணும், பெண்ணும் சூட்கேசை ரயில் பெட்டியில் வைத்து விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் சூட்கேசை வைத்துச் சென்ற ஆண்- பெண் சென்ற வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து வருவதை கண்டுபிடித்தனர். இதன்பேரில், கடந்த 21-ந் தேதி ரயில்வே காவல்துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் துறையினருடன் இணைந்து, மசூதி தெருவில் கடந்த 20 நாட்களாக பூட்டி கிடந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து.
காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியாணி செய்யக்கூடிய டபராவில் ரத்தமும், மேல் மூடியில் மைதா மாவும் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அதை கைப்பற்றி ரத்த சோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண் ஹையத்துன் நிஷா என்பவர், சென்னையை சேர்ந்த ஜகுர்கான் என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவில் திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு யூசுப்கான் என்ற மகன் உள்ளார்.

கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பள்ளிக்கூட தெருவில் வீடு வாடகை எடுத்து ஹயத்துன்நிஷா மற்றும் அவரது மகன் யூசுப்கான் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். 4 மாதத்துக்கு முன்பு ஹயத்துன்நிஷா, ராகுல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் மகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யூசுப்கான் தனது அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு பெருங்களத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கேயே வேலை செய்து வந்துள்ளார்.
மாடம்பாக்கத்தில் வசித்து வந்த ஹயத்துன்நிஷா வீட்டை காலி செய்து கொண்டு கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடுவாஞ்சேரி மசூதி அருகில் உள்ள முகம்மதுரபி என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி ஹயத்துன்நிஷாவை பார்ப்பதற்கு ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் வந்துள்ளனர். வீட்டு உரிமையாளர் முகம்மதுரபி இவர்கள் யார் என்று ஹயத்துன்நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனது தம்பி மற்றும் தம்பி மனைவி என்று கூறியுள்ளார். இரண்டு வாரமாக ஹயத்துன்நிஷாவுடன் தங்கி இருந்த தம்பதியினர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு ஊருக்கு கிளம்பினர்.
அப்போது வீட்டு உரிமையாளர் ஹயத்துன்நிஷா எங்கே என்று கேட்டுள்னார். அதற்கு ராகுல், எனது அப்பா உடல்நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருப்பதால் அக்கா ஹயத்துன்நிஷா ஏற்கனவே சென்றுவிட்டார். அப்பா இறந்து விட்டார். அதனால் நாங்கள் ஊருக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். இதற்கிடையே ஹயத்துன்நிஷாவின் மகன் யூசுப்கான் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தனது அம்மாவை காணவில்லை என புகார் கொடுத்தார். கூடுவாஞ்சேரி காவல்துறையினர் பெண் மாயம் என்று வழக்கு பதிவு செய்து வந்தனர்.
ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து வந்த ரயில்வே காவல்டுறையினர் சூட்கேசில் மீட்கப்பட்ட பெண் சடலத்தின் தலை மற்றும் கைகள் கூடுவாஞ்சேரியில்தான் உள்ளது என்று கூறிவிட்டு சென்றனர். இதனால் கொலையான பெண்ணின் தலை மற்றும் கைகளை காவல்துறையினர் தேடிவந்தனர். இதனை தொடர்ந்து விமானம் மூலம் அசாம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்த 5-க்கும் மேற்பட்ட தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக செல்போன் டவர் மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், மணிப்பூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளிகளான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மானிக்உதின்லஸ்கர் மற்றும் அவரது காதலி பகபதிமாஜி ஆகிய இருவரையும் நேற்று காலை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை மணிப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரயில் மூலம் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று மாலை அழைத்து வருகின்றனர்.
பெண்ணின் தலை, கைகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை உள்ள ரயில் நிலையங்களில் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்த காவல்துறையினர் பிரபல துணிக்கடையின் 2 கவர் மூலம் துப்பு துலக்கினர். இதில் திருமணத்தை தாண்டிய உறவால் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக 24 நாட்கள் கடந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.