வரும் திங்கள்கிழமை நாங்கள் எழுந்து ஓடக் கூடாது என சொல்லிவிட்டு முதல்வர் விஜய்யே ஓடுகிறாரே “3 நாட்கள் அவைக்கு விடுமுறை. நன்கு தயார் செய்து கொண்டு வரும் திங்கள்கிழமை தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இளைய கலைஞர் உதயநிதி கிண்டல் செய்தார்.
தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் இளைய கலைஞர் உதயநிதி கடந்த 116 நாட்களில் தவெக அரசில் நடந்த கொலை, கொள்ளை, ஆணவக் கொலை, பாலியல் குற்றங்களை பட்டியலிட்டார்.
அதேபோல தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்தார். மேலும் “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறிவிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை எதற்காக இந்த ஆட்சியில் காவல்துறையின் தலைமை இயக்குநராக நியமித்தீர்கள், அது போல் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அமல்ராஜை ஏன் சென்னை ஆணையராக்கினீர்கள். நாங்கள் நியமித்த அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதால்தானே அவர்களுக்கு புரமோஷன் கொடுத்தீர்கள் என இளைய கலைஞர் கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்வர் விஜய், “அனைத்து எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும். ஆனால் நான் பதிலளிக்கும் போது யாரும் எந்திரிச்சு ஓட கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும்” என கூறிவிட்டு விஜய் அவையை விட்டு வெளியே சென்றுவிட்டார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எங்களை வெளியே ஓடக் கூடாது என கூறிவிட்டு தற்போது அவரே வேகமாக வெளியே ஓடிவிட்டாரே” என தெரிவித்தார்.
மேலும் இளைய கலைஞர், “3 நாட்கள் அவைக்கு விடுமுறை. எனவே 3 நாட்கள் நன்கு தயார் செய்து கொண்டு வரட்டும். வரும் திங்கள்கிழமை அன்று எந்த திசை திருப்பலும் தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்” என இளைய கலைஞர் உதயநிதி தெரிவித்தார்.