தமிழக சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அவை நடவடிக்கைகள் அமைதியாக போகின்றன. அவர் பேசினால்தான் சண்டை ஏற்படுகிறது என விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இதில், பிரேமலதா பேசுகையில்,”சட்டசபையில் மானியக் கோரிக்கையை தவிர்த்து அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிக் கொள்வதால் மக்களுக்கு என்ன பயன், இது சட்டப்பேரவையா இல்லை சண்டை பேரவையா? பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அவை நடவடிக்கைகள் அமைதியாக போகின்றன. அவர் பேசினால்தான் சண்டை ஏற்படுகிறது. எனவே அவருக்கு வாய்ப்பளிக்காதீர்கள்” என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 15 பேர் பேசியிருக்க வேண்டும். ஆனால் 2 பேர் மட்டுமே பேசினார்கள். சட்டசபைக்குள் 12 மணி முதல் 2.30 மணி வரை சண்டையிலேயே சென்றது. அமைச்சர் ஆதவ்விடம் நேரடியாகவே நான் சொல்லிவிட்டேன்,. “தம்பி அவை அமைதியாக சென்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எழுந்து பேசினால்தான் சண்டை வருகிறது. அதனால் நீங்கள் பேசாதீர்கள்” என சொல்லிவிட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.