மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5-ந் தேதி இரவு மானாமதுரை சீயோன் நகரில் ஏற்பட்ட தகராறில் இருவரை வெட்டிய வழக்கில் ஆகாஷ் டெலிஷனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்தார். இதற்கு, கைது செய்யச் சென்றபோது தப்பிக்க முயன்று பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை தாக்கியதில்தான் உயிரிழந்தாகக் கூறி அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

மேலும், பிரேதப் பரிசோதனையில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. காவல் ஆய்வாளர் திலீபன் உள்பட 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, சிபிசிஐடி கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்த விவரம் தெரியாமல் இருந்தது.மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 6 காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிசிஐடி மதுரை நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 18-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் நகல் தற்போது ஆகாஷ் டெலிஷன் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. அதில், ஆகாஷ் டெலிஷனை காவல்துறையினர் மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.

அவரது வலது காலில் முழங்காலுக்கு கீழ்பகுதி மற்றும் கணுக்காலுக்கு மேல்பகுதியில் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டு ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்தார். மேலும், தாக்கிய இரும்புக் கம்பியை மறைத்து வைத்துவிட்டு காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்ததாக தவறான தகவலை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 68 நாட்களுக்குப் பிறகு நகல் வழங்கியதாகவும், அதிலும் 12 பக்கங்கள் மட்டுமே இருப்பதாகவும், விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் முழுமையாக வழங்கவில்லை என்றும் ஆகாஷ் டெலிஷன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.