லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விமலா பணியிடை நீக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிராக தமிழக அரசு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் விமலா சென்னை பெருநகரக் காவல்துறையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். இந்த வழக்கின் ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் டிஐஜி என். தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில், கடந்த 17-ந் தேதி ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக சந்தேகம் இருந்ததால், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜாய் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், விமலா இந்த விவகாரம் குறித்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “காவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜலட்சுமி என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தேன் என்ற காரணத்துக்காக, லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் தன்னை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்” என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் விமலா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது, நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிடி ஆஷா, “நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதியே உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படியே மனுதாரர் விமலா, சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு எதிராக வரைவு எஃப்ஐஆர் தயாரித்து, இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து இருக்கிறார்.
அந்த வரைவு எஃப்ஐஆரில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் சில திருத்தங்களை செய்து ஒப்புதல் அளித்த பிறகே மனுதாரர் அந்த எஃப்ஐஆரை கடந்த பிப்ரவரி 12-ந் தேதி பதிவு செய்து இருக்கிறார். எனவே சக காவல் ஆய்வாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தார் என்ற காரணத்துக்காக மனுதாரரை இடைநீக்கம் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. இதனால் விமலா இடைநீக்கத்துக்கு வரும் ஜூலை 9-ந் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுகிறேன் என நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டார்.