தன் மீதான தாக்குதலை, கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்றும், இளைஞர்களின் குரலை ஒடுக்குவதற்கான தோல்வியுற்ற முயற்சி என்றும் விவரித்தார். “நாங்கள் எங்கள் கோரிக்கையில் உறுதியாக நிற்போம் என அபிஜீத் டிப்கே தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போராட்டத்தின் போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
நீட், சிபிஎஸ்இ போன்ற தேர்வுகளில் நிலவும் குளறுபடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று (ஜூன் 15) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அபிஜித் தீப்கே பங்கேற்றார். அவரை போராட்டத்தில் ஈடுபட்ட CJP ஆதரவாளர்கள், தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஷாஹித் ஸ்மாரக் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது. அங்கு இளைஞர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், திடீரென அபிஜீத்தின் கழுத்தில் இருந்த ஸ்கார்ஃபை பிடித்து இழுத்தனர். மேலும், அவரை சரமாரியாகத் தாக்கியதோடு, பலமுறை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளவும் முயற்சி செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அபிஜித் தீப்கேவை தாக்கியவர்களில் இருவரை கூட்டத்தில் இருந்தவர்கள் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவலர்கள் தடுப்பு காவலில் கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அபிஜித் தீப்கே, “இது முற்றிலும் கோழைத்தனமான செயல். இது மாதிரியான உடல் ரீதியான தாக்குதல்கள் பயத்தின் அறிகுறியாகும். அமைதியான முறையில் நாம் தொடர்ந்து குரல் எழுப்புவோம். காந்தி மற்றும் அம்பேத்கரை பின் தொடர்ந்து வருகிறேன். இந்த போராட்டத்தை அமைதி, அன்புடன் தொடர்ந்து முன்னெடுப்பேன். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாக்பூர் சம்விதான் சௌக்கில் (அரசியலமைப்பு சதுக்கம்) இன்று (ஜூன் 16) நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் பங்கேற்க அபிஜீத் டிப்கே நாக்பூர் சென்றுள்ளார். தொடர்ந்து CJP-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். தன் மீதான தாக்குதலை, கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்றும், இளைஞர்களின் குரலை ஒடுக்குவதற்கான தோல்வியுற்ற முயற்சி என்றும் விவரித்தார். “நாங்கள் எங்கள் கோரிக்கையில் உறுதியாக நிற்போம் – தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்!” என அபிஜீத் டிப்கே தெரிவித்தார்.