தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சனைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி கடுமையாக சாடியுள்ளார் .
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மே 6-ந் தேதி தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜோசப் விஜய் உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் மே 7-ந் தேதி இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஜோசப் விஜய் பேசி இருந்தார். மேலும் மே 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று சண்முகம் எச்சரித்துள்ளார்.
தவெகவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கைகோர்த்துள்ள நிலையில், சிபிஐஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, ஒரு தகவல் தீவிரமாகப் பரவியது. எதிரெதிர் துருவங்களாக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்க, விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள், ஜோசப் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்ற எண்ணிக்கையை எட்டியுள்ள தவெக, ஆட்சியமைத்தது
அதனைத் தொடர்ந்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். விஜய்க்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என தகவல் வெளியானது. ஆனால் விஜய் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களில் 5 பேர் எடப்பாடியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். மேலும் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். மதுராந்தகரம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
மூன்று பேருமே வேலுமணி – சிவி சண்முகம் தரப்பில் இருந்தவர்கள். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த மூவரும் தவெகவில் இணைந்துள்ளனர். இது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நடந்து முடிந்து 1 மாதம் தான் ஆகியுள்ளது. ரிசல்ட் வந்து 20 நாள் தான் ஆகிறது. எம்எல்ஏக்களாக பதவியேற்று 12 நாட்கள் தான் ஆகின்றன. அதற்குள், அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சி தாவியுள்ளனர். இவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவுள்ளது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த செயல்பாட்டைக் கண்டித்துள்ளன. பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் தவெகவில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும்.
அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சனைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை. தவெகவின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுநர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை.
மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது. ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது.
அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.