துபாயில் இருந்து தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் இன்று இரவு சென்னை திரும்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமார் அவர்களின் வீட்டுக்கு நேரில் நடிகை திரிஷா உடன் சென்று அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி. இவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல் உபாதையால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இன்று 30.05.2026 காலையில் மோகினி காலமானார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரங்கல் குறிப்பில், அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
முதலமைச்சர் விஜய், அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில்,அஜித் குமார் கார் ரேஸ்க்காக துபாயில் இருந்த நிலையில் தாயார் மறைந்த செய்தியை கேட்டு சென்னை புறப்பட்டார். இன்று இரவு சுமார் 9 மணியளவில் அஜித் குமார் சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய அஜித் குமாரின் முகம் சோகமாக இருந்தது. விமான நிலையத்தில் நின்றவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டபடி அஜித் குமார் காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
அஜித்குமார் வீடு திரும்பியதை அறிந்ததும் முதலமைச்சர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டுக்கு விஜய் நேரில் நடிகை திரிஷா உடன் சென்று சென்று அவரது தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறினார். சுமார் 20 நிமிடங்கள் வரை அஜித் குமாரின் வீட்டில் இருந்த விஜய் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு நாளை காலை 8.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.