அதிமுகவில் 53 ஆண்டாக இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர் என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக கூட்டணி என தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழத்தில் ஆளும் திமுக ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், அதிமுக – பாஜக கூட்டணிகள் ஆட்சியை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக டெல்லி தலைமை தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் TTV தினகரன் பரிசுகள் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார். அதன்பின் TTV தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “அதிமுகவினர் இணைய வேண்டும் என்று பாஜகவினர் 2021 தேர்தலிலேயே முயற்சி செய்தனர். இது போல இப்போதும் முயற்சி செய்கிறார்கள். கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கும்போது அவர்களே எப்படி பேசி தீர்க்க முடியும். கட்சி பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தம் தேவையானது.

மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை நான் தவறாகவோ, தலையிடுவதாகவோ நினைக்கவில்லை. அதிமுக இணைப்புக்காக பாஜக அதிகாரம் வைத்து மிரட்டுவதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக நான் நினைக்கவில்லை. கூட்டணியில் இருக்கும்போது அந்தக் கட்சியில் உள்ள பிரச்சனையை சரி செய்வது மிரட்டுவது இல்லை.
53 ஆண்டாக அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர். அவர் கோபத்தில் தவெகவுக்கு சென்றிருக்கமாட்டார். சிந்தித்து நிதானமாகவே முடிவெடுத்திருப்பார். செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை. விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது அவருக்கு புரியவில்லை. 16-ந் தேதி ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள்.

இது நட்புரீதியானது. தமிழ்நாடு அமைதி பூங்கா. சாதி, மதம் கடந்து இங்கு அனைவரும் மதநல்லிகணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எல்லோரும் சமம் என்கிற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறோம். கடவுள் பெயரையோ, சாதி பெயரையோ பயன்படுத்தி யாரும் கலவரம் செய்ய கூடாது. சுமூகமாக முடிக்க வேண்டிய பிரச்சனைகளை அனைத்து இயக்கங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்.
2026 சட்டமன்ற தேர்தலில் சீமான் தனித்து போட்டியிடுகிறார். இது இல்லாமல் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக தனித்தனியாக உள்ளன. விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையப் போவதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. நான் யாருடன் இணைவது என்று முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியானவுடன் நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். கூட்டணிக்காக யாரிடமும் நிபந்தனைகள் எல்லாம் நான் விதிக்க மாட்டேன். நட்பு ரீதியாக பேசுவதுடன் சரி. அமமுக இடம்பெறும் போகும் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும். அடுத்தடுத்து கோவை, திருப்பூரில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். சட்டமன்ற தேர்தலுக்காக கிளைக்கழகத்தில் இருந்து எங்களின் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.” என TTV தினகரன் தெரிவித்தார்.