கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் விராட் கோலி “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எவ்வளவோ செய்தாலும் அவருக்கும், அவரை கடவுளாக கொண்டாடும் ரசிகர்களுக்கும் ஐபில் கோப்பை ஒரு கனவாகவே இருந்ததை 18-வது ஐபில் போட்டியில் ஈ சாலா கப் நாம்டே என்று பல வருடங்களாக கோஷம் போட்டு ஆர்சிபி அணி ரசிகர்கள் கொண்டாடும் போதும் ஆர்சிபியினரை ஒரு கூட்டம் ‘ஈ சாலா கப் லாலிபாப்பு..! என்ன கிண்டல் செய்யும்.
இந்த முறையும் அவர்களுக்கு கோப்பை கிடைக்காது என ஒவ்வொரு முறையும் கிண்டல் செய்யப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த 2025-ஆம் ஆண்டு தங்களின் 17 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னர் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஒட்டுமொத்த ரசிகர்களின் வேதனையை சுமந்த 18 ஆண்டுகள் போராடி அந்த கோப்பைபை ஜெர்சி எண் 18 ஒரு குழந்தையை சுமப்பதுபோல சுமந்த தருணத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.
அதைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு ஐபில் தொடரில் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஶ்ரீகாந்த், “இந்தப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட் மிகவும் முக்கியம். அவரை 15 – 20 ரன்களுக்கு மேல் எடுக்கவிட்டால் அது குஜராத்துக்கு ஆபத்து. அதற்குள் வீழ்த்திவிட்டால், அது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்” என்று கூறியிருந்தார். அதேபோல லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் இயக்குநர் டாம் மூடி, “விராட் கோலி 35 ரன்களுக்கு மேல் எடுத்தாலோ அது ஆர்சிபிக்கு சாதகமான முடியும் என குறிப்பிட்டார்.

விராட் கோலியின் விக்கெட் முக்கியம் என்று அவர்கள் கூறுவதற்கான காரணம், கடினமான சூழ்நிலைகளை சமாளித்து ஆட்டத்தை தன் அணிக்காக முன்னெடுத்துச் செல்லும் அனுபவம் கொண்டவர் விராட் கோலி. மற்ற எல்லா போட்டிகளை விடவும் இறுதிப் போட்டி அந்த நெருக்கடியை ரொம்பவே அதிகமாக ஏற்படுத்தும். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை 156 என்பது எளிய இலக்கு தான். ஆனால், அது எதிர்பார்த்ததைப் போல் மிகவும் எளிமையான சேஸாக இருக்கவில்லை.
ஆரம்பத்தில் 156 என்ற இலக்கு எளிதானதாகவே தோன்றியது. ஆர்சிபி தங்கள் சேஸை தொடங்கிய விதம் அது அப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. ஆனால், மிடில் ஓவர்களில் அது மெல்ல மாறத் தொடங்கியது. ரஷித் கான் வீசிய ஒரு ஓவர் குஜராத் டைட்டன்ஸுக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆர்சிபி அணியில் சிறு கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ஆட்டம் மாறுவதற்கான சாத்தியக்கூறு அங்கு அதிகமாகவே இருந்தது.
9-வது ஓவரில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட 91/4 என்ற நிலைக்குச் சென்றது ஆர்சிபி. வெற்றிக்கு இன்னும் 65 ரன்கள் தேவை. அந்த நிலையில் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஏனெனில், ஒருபக்கம் ரஷித் கான் தன் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். மற்றொருபக்கம் ஆர்சிபி-யின் அடுத்து வரும் பேட்டர்கள் இந்த சீசனில் பெரும் பங்களிப்பைக் கொடுக்கவில்லை.

இந்த சீசனில், இந்தப் போட்டிக்கு முன் விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் மொத்தமே 105 ரன்கள் தான் ஜித்தேஷ் ஷர்மா எடுத்திருந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் அடித்திருந்ததோ 7 இன்னிங்ஸ்களில் 83 ரன்கள். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சுழலுக்கு எதிராக எப்படித் தடுமாறினார் என்பதைப் பார்த்தோம்.
அப்படியிருக்கையில், அடுத்த ஓரிரு ஓவர்களில் இன்னொரு விக்கெட் விழுந்தாலும் அங்கே ஆர்சிபி மீதான நெருக்கடி அதிகரித்துவிடும். ரஷித் கான், ரபாடா, ஹோல்டர் போன்றவர்களுக்கு ஓவர்கள் மீதமிருக்கும்போது அது சாத்தியம். உதாரணமாக, மீண்டும் அந்த ஐபிஎல் 2016 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆர்சிபி வெற்றிக்கு 209 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஆர்சிபி 10.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து நிலையில் பெஞ்சமின் கட்டிங் பந்து வீச்சில் கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மாற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதேபோல ஆர்சிபி 12.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து நிலையில் பரிந்தர் சிரன் பந்து வீச்சில் விராட் கோலி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மாற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி டி – வில்லியர்ஸ், கே. எல். ராகுல் மற்றும் ஷேன் வாட்சன் உட்பட 8 விக்கெட் கையிலிருக்கையில் அவர் அவுட்டாகி வெளியேறியபின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிய, 8 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி தோற்றது.
அந்த இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற முடியாததற்கு எந்த வகையிலும் கோலி காரணம் இல்லை. ஆனால், சவாலான கட்டங்களில் தன் அணியைக் கரைசேர்த்த அந்த வீரரால், அந்த ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் மட்டும் அதைச் செய்ய முடியாமல் இருந்தது. அதனால்தான் இதுபோன்ற இடங்களில் விராட் கோலியின் விக்கெட் அதீத முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக இதுபோன்ற போட்டிகளில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிடுகிறது.
அதை தன் அனுபவத்தின் மூலம் விராட் கோலி நிறைவேற்றினார். ஆரம்பத்தில் அதிரடி காட்டியவர், அந்த இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததும் டிம் டேவிட் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். இலக்கை நெருங்கிய பிறகு மீண்டும் அதிரடியைக் கையில் எடுத்து போட்டியை விராட் கோலி முடித்தார். இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை சுமந்த ஒரு இன்னிங்ஸில் நிலைத்து நின்று விளையாடியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய அதிவேக ஐபிஎல் அரைசதத்தை (25 பந்துகளில்) விராட் கோலி பதிவு செய்தார். இது அவருடைய மிகவும் அதிரடியான இன்னிங்ஸ்களில் ஒன்று. ககிஸோர் ரபாடா வீசிய 4-வது ஓவரின் முதல் 4 பந்துகளில் மட்டும் அவர் 18 ரன்கள் எடுத்தார்.

அதில் மணிக்கு சுமார் 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட ஒரு பந்தை அநாயசமாக ஃபிளிக் செய்து சிக்ஸராக்கினார். பர்ப்பிள் கேப் வென்ற ரபாடாவுக்கு எதிராக இந்தப் போட்டியில் 12 பந்துகளில் 35 ரன்கள் விராட் கோலி விளாசினார். ஆனால், இதை வெறுமனே அதிரடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அவை மிகவும் கவனமாகவும் திட்டமிட்டும் ஆடப்பட்ட ஷாட்கள். இந்த அதிரடிக்கு மத்தியில் அவருடைய கட்டுக்கோப்பான ஆட்டம் வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம்.
இந்த இன்னிங்ஸில் விராட் கோலி அடித்தது 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள். அவை அனைத்துமே லெக் சைடில் அடிக்கப்பட்டவை. அவர் அடித்த 75 ரன்களில் 66 ரன்கள் லெக் சைட் அடிக்கப்பட்டவையே! அரைசதம் கடக்கும் வரை வெறும் 3 ரன்கள் மட்டுமே அவர் ஆஃப் சைட் ஆடியிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் ஆஃப் சைடில் அடித்த 9 ரன்களுமே கூட மிகவும் இலகுவாக அடிக்கப்பட்ட ஷாட்களே. அவையும் கூட ரஷித் கான் மற்றும் அர்ஷத் கான் இருவருக்கும் எதிராக மட்டுமே வந்தது. ஆஃப் சைட் பவுண்டரி அடிக்கும் எண்ணத்தோடு அவர் அவ்வளவாக பெரிய ஷாட்கள் ஆடவேயில்லை.
இதற்குக் காரணம், பல தருணங்களில் அது விராட் கோலியின் விக்கெட்டைப் பதம் பார்த்திருந்ததுதான். குவாலிஃபயர் 1 போட்டியில் ஹோல்டர், அவுட் சைட் ஆஃப் வீசிய பந்தை அடிக்கச் சென்று இன்சைட் எட்ஜாகி விராட் கோலி போல்டானார். சன்ரைசர்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சகிப் ஹுசைன் பந்துவீச்சில் கவர் திசையில் விராட் கோலி கேட்சானார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டக் அவுட் ஆனபோது அவர் கேட்சான இடம் மிட் ஆஃப். இப்படி எதுவும் இறுதிப் போட்டியில் நடந்துவிடாமல் விராட் கோலி பார்த்துக் கொண்டார்.
ரபாடா, சிராஜ், ஹோல்டர் போன்ற பௌலர்கள் பெரும்பாலும் ஸ்டம்ப் லைனில் பந்துவீசியதால் அவற்றை லெக் சைடில் ஆடுவது விராட் கோலிக்கு எளிதாக இருந்தது. ஆஃப் சைட் வீசப்பட்ட ஒருசில பந்துகளையும் அவர் கட்டுப்பாட்டோடு எதிர்கொண்டு ஆஃப் சைட் பெரிய ஷாட்கள் ஆடுவதைத் தவிர்த்தார். இடது கை பௌலரான அர்ஷன் கான் ‘ஓவர் தி ஸ்டம்ப்’ வந்து வீசியதால், அந்த கோணத்தைப் பயன்படுத்தி ஆஃப் சைடில் சிங்கிள்கள் எடுத்தார். அவர் ஆஃப் சைட் எடுத்த 9 ரன்களில், 5 ரன்கள் அர்ஷத்துக்கு எதிராகவும், 4 ரன்கள் ரஷித்துக்கு எதிராகவும் வந்தவை. அர்ஷர்த்துக்கு எதிராக அடிக்கப்பட்டவை அனைத்துமே சிங்கிள்கள். எதுவுமே அபாயம் இல்லாத இலகுவான ஷாட்கள்.
விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் 100 சதவிகிதம் கட்டுக்கோப்பானதாக இருந்ததா என்றால் இல்லை. ஒரேயொரு ஷாட்டை மட்டும் அவர் ஆஃப் சைட் தூக்கி அடித்தார் – ஷுப்மன் கில் கேட்ச் பிடித்த அந்த ஒற்றைப் பந்து. ஷுப்மன் கில் பந்தைப் பிடித்தபோது பந்து தரையில் பட்டுவிட்டதால் அவுட்டாவதில் இருந்து விராட் கோலி தப்பித்தார். அதுவும் கூட வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட பிறகு அடிக்கப்பட்ட ஷாட் தான். ஆரம்ப கட்டத்தில் அவர் அப்படி எதையும் முயற்சி செய்திடவில்லை. மற்றபடி இப்படித்தான் ஆடவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக விராட் கோலி இருந்தார். இந்த இறுதிப் போட்டியில் அதில் வெற்றியும் கண்டார். அதன் மூலம் 3 முறை தன் அணிக்காக முடித்துக்கொடுக்க முடியாததை, இம்முறை ‘சேஸ் மாஸ்டர்’ விராட் கோலி முடித்துக் கொடுத்தார்.