இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலில் இந்திய போர் விமானம் போல ஹாரிஸ் ரவுஃப் சைகை நடித்துக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அபிஷேக் ஷர்மா வெறும் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில், திலக் வர்மா 30 மற்றும் ஹர்திக் பாண்டியா 7ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களை வார்த்தைகளாலும், சைகைகளாலும் சீண்ட முயன்றனர். குறிப்பாக, ஹாரிஸ் ரவுஃப் எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது, இந்திய ரசிகர்கள் 2022 T -20 உலகக் கோப்பையில் விராட் கோலி அடித்த சிக்ஸரை நினைவுபடுத்தி, “கோலி, கோலி” என்று முழக்கமிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுஃப், ரசிகர்களை நோக்கி ‘6-0’ என்று சைகை காட்டினார். இது கடந்த மே மாதம் நடந்த ராணுவ மோதலில் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதைக் குறிப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. அதே போல ஒருமுறை ஹாரிஸ் ரவுஃப் போர் விமானம் போல சைகை செய்தும் காட்டினார். மேலும், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதைப் போல அவர் நடித்துக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.