சென்னை முழுவதும் ஏற்படும் மின் தடையை கண்காணித்து மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 சிறப்பு குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்து, உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களும் இயங்கத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெரம்பூர், முகப்பேர், கொளத்தூர், தியாகராய நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு நேரங்களில் கடுமையாக மின் வெட்டு இருந்து வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது உரிய பதில் அளிக்காத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின்தடை நீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கி வைத்தார்.
அப்போது கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை முதன்மை செயலாளர், அனில் மேஷ்ராம், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் ம. கோவிந்த ராவ், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.