இன்றைய அவசர உலகில் மொத்தமும் பணம்தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையே மனிதாபிமானம் என்பது அரிதாகி வருகிறது. அதிலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மை என்பது இந்த காலத்தில் ஒரு பேரதிசயமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவர் தனது 6 பவுன் தங்கச் சங்கிலியைத் தவறவிட, அது குப்பையோடு குப்பையாகச் சென்றிருக்கலாம் என அஞ்சி மாநகராட்சி கவுன்சிலர் உதயக்குமாரிடம் உதவி கோரினார். உடனே களமிறங்கிய தூய்மைப் பணியாளர்கள் ராணி, சத்யா மற்றும் சாவித்திரி ஆகியோர், சுமார் 1 டன் எடையுள்ள குப்பைக் குவியல்களை மிகுந்த சிரமத்திற்கு இடையே பல மணி நேரம் கிளறித் தேடி நகையை மீட்டெடுத்தனர்.
காணாமல் போன நகை கிடைத்த மகிழ்ச்சியில் சிவகாமி நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்க, அந்தப் பணியாளர்கள் நகையை ஒப்படைத்தனர். துப்புரவுப் பணியாளர்களின் இந்த அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான செயலை சமூக வலைதளங்களில் பலரும் வியந்து பாராட்டியது நினைவிருக்கலாம்.
இந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலத்தின் 69-வது வார்டில் உள்ள பாரதி பார்க் 4-வது வீதியில், ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர் நேற்று வழக்கம்போல குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைகளின் நடுவே 3 பவுன் எடை கொண்ட தங்க நகை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நகையை எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், உடனடியாகத் தேடிச் சென்று அந்த வீட்டின் உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்தார்.
கிடைத்த வரை லாபம் என்று எண்ணாமல், தான் கண்டெடுத்த நகையைத் துளியும் பேராசைப்படாமல் உரியவரிடம் ஒப்படைத்த சக்திவேலின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும், தான் செய்யும் தொழிலின் மாண்பைக் காக்கும் வகையில் அவர் காட்டிய நேர்மை, சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாமானிய பணியாளரின் இந்த உயரிய செயல், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகக் கூறி பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.