விஜய் பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோயம்புத்தூர் சூலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதான 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள இடங்களில் சிறுமியை பெற்றோர் தேடினர். பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், கோயம்புத்தூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியின் வீட்டின் அருகே இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாகக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் என்று தகவல் பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடந்தனர். சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இஎஸ்.ஐ மருத்துவமனை முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதானம் செய்து அவர்கள் கலைந்து செல்லவில்லை.
விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், தவெக எம்.எல்.ஏ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, CCTV காட்சிகளின் அடிப்படையில் நாகையை சேர்ந்த கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மோகன் ராஜ் என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதில், ஏற்கனவே அறிமுகமான அந்தச் சிறுமிக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று இக்கொடூர செயலில் ஈடுபட்டதை அவன் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோகன்ராஜ் என்பவருக்கு இந்த விவகாரம் தெரிந்தும் வெளியில் சொல்லாமல் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கோவையில் 10-வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம்.
தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க – சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.