திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லட்சியமும், கொள்கையும் முக்கியம் என்று சூளுரைத்து மீண்டும் நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறி இருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தவெக 108 இடங்கலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும் மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக் கட்சிக்கே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு கி.வீரமணி பதிலளித்தார். அப்போது, நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாற்றம் என்ற பெயரில் நடந்திருந்தாலும் திரைக்கவர்ச்சி மற்றும் இளைஞர்களின் மோகத்தின் அறுவடை தான் இந்த தேர்தல் முடிவு என்று கி.வீரமணி குறிப்பிட்டு உள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் லட்சியமும், கொள்கையும் முக்கியம் என்று சூளுரைத்து மீண்டும் நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர். எனினும் அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்க உள்ள ஜோசப் விஜய்க்கு நமது வாழ்த்துக்கள் என கி. வீரமணி தெரிவித்தார்.