தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் வருகிற 10-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடந்தது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் விசிக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.
இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்துள்ளனர். இது 85.10 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும், 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்ட்டிராங் ரூமில் மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அங்கு சிறிது நேரம் அமர்ந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா எம்.பி, ஆகியோரும் அங்கு சென்ற நிலையில் அதுதொடர்பான புகைப்படம் மற்றும் காணொளி வெளியாகியுள்ளது.