தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை விஜய் நட்சத்திர ஹோட்டலில் அறிமுகம் செய்து கொண்டு இருக்க மறுபுறம் தவெகவினர் சிலர் சென்னை நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தவெக எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் இன்றைய தினம் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை அளித்த விஜய், வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இதில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கிலும் விஜய் போட்டியிடுகிறார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா என முக்கிய தலைவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். விஜய் வேட்பாளர்களை அறிவித்து முடிக்கும் முன்பே, தவெகவினர் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிப்பதாகச் சொன்னதால் 3 ஆண்டுகளாக இறங்கி வேலை செய்து வந்ததாகவும் இருப்பினும் இப்போது தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தனக்குப் பதிலாக 3 மாதங்களுக்கு முன்பு நாதகவில் இருந்து வந்த தென்றல் என்பவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்ததாகவும் இருப்பினும் நேர்காணல் கூட நடத்தாமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விஜய் வேட்பாளர்களை அறிவித்து முடிக்கும் முன்பே, தவெக கட்சியினர் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.