நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே… நம் நாடு எனும் தோட்டத்திலே… நாளை மலரும் முல்லைகளே… – எம்.ஜி. ஆர் நடித்த “நம் நாடு” திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய டி.எம். சௌந்தரராஜன் பாடிய வரிகளை கற்றுக்கொடுக்க தவறியதன் விளைவு , ஜாலியா குடும்பத்தோட வெளிய போயிட்டு வரலன்னு வெளியே போனால் ரோட்டுல சண்டை… அய்யோ அப்பானு வீட்டுக்கு வந்தா வீட்டுல சண்டை… இந்த டென்ஷனை “சற்று கூல்” செய்யலன்னு டிவியை போட்ட அங்கேயும் சண்டை… என்று நாமெல்லாம் புலம்பும் நிலைக்கு இன்றைய சமூதாயம் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவு +1 மாணவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த +2 மாணவர் உயிரிழந்த சம்பவம் நம்மையெல்லாம் தலைகுனிய வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் படிக்கும் +1 வகுப்பு மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18-ந் தேதி இந்த பள்ளியில் +2 வகுப்பு படிக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் கவியரசன் மற்றும் +1 வகுப்பு படிக்கும் மாணவர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், +1 வகுப்பு மாணவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அந்த மாணவரின் பெற்றோர், மாணவரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாக்குதல் நடத்திய மாணவரும் மைனர் என்பதால் இருவரது பெற்றோரையும் வரவழைத்து சமரசம் செய்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ந் தேதி மீண்டும் +2 வகுப்பு கவியரசன் தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு மாணவர்களுக்குள் புகைந்துள்ளது.
இதையடுத்து டிசம்பர் 4-ந் தேதி வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் 10 க்கும் மேற்பட்ட +1 வகுப்பு மாணவர்கள் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே காத்திருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடிந்து +2 வகுப்பு மாணவர் கவியரசன் தன் நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார். பட்டீஸ்வரம் கோயில் அருகே சென்றபோது 11-ம் வகுப்பு மாணவர்கள் கவியரசன் உள்ளிட்ட 12-ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கியுள்ளனர். அப்போது கவியரசன் தலையில் கட்டையால் அடித்து விட்டு ஓடி விட்டனர்.

இதில் சரிந்து விழுந்த கவியரசனை சக மாணவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் சக மாணவனைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர் மாணவரை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கவியரசனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, +2 வகுப்பு மாணவரை தாக்கிய 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை கைது செய்தனர். தொடர்ந்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதனையடுத்து, தஞ்சாவூரில் உள்ள இளஞ்சிறார் நீதிகுழும நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அந்த மாணவர் கடந்த சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த +1 வகுப்பு மாணவர்கள் 15 பேர் மீதும், கொலை, ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதம் கொண்டு தாக்குதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட BNS 103, 296 ( b), 118 (1), 351 (3), 190, 115 (1), 118 (1) ஏழு பிரிவுகளின் கீழ் பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்…
ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் …
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்… என்ற பாடல் வரிகளைப் போல பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் போன்றோர் தங்கள் கடமைகளை உணர்ந்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் தடுப்போம்.