ஒரு சிலர் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் ஆன்லைனில் தொடர்பு கொண்டு முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமாக முதலீடு குறித்து பேசுகிறார்கள். இந்த வலையில் சிக்குவோரை நம்ப வைக்கும் விதமாக முதலில் சிறிய தொகை அளிப்பார்கள். இதை பார்த்து அவர்கள் அதிக தொகையை முதலீடு செய்வார்கள். அப்படி முதலீடு செய்த பணத்தை மொத்தமாக சுருட்டிவிடுவார்கள்.. அப்படியாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபரிடம் 25 லட்சம் மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மந்தைவெளியை சேர்ந்த சுதா கார்த்திக் என்பவர் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் தொழில் அதிபராகவும் உள்ளார். சுதா கார்த்திக் அண்மையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் முதலீடு மோசடி தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், என்னுடைய ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ‘ஆன்லைன்’ வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமாக பேசினார். அதை நம்பி ரூ.25 லட்சம் முதலீடு செய்தேன்.ஆனால் இதில் மோசம் போய்விட்டேன். அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைமிக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் நடத்திய விசாரணையில் ‘ஆன்லைன்’ மோசடியில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீபா என்ற பெண்ணை கைது செய்தனர். அவரை, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பெங்களூருவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், ஆன்லைன் மோசடி குற்றவாளிகளுக்கு துணையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. தீபா, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.