இப்போது இருப்பது அதிமுக அல்ல எடப்பாடி திமுக. 2026 தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் சொல்லும் எனவும் பழனிச்சாமிக்கு பதவி வெறி, சுயநலம் அதிகமாய் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் TTV. தினகரன் தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே. சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் என மூவரும் ஒரே நேரத்தில் திடீரென ஒன்றாக வந்து மரியாதை செலுத்தினர். அது போல் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது “என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சிதான்,” என செங்கோட்டையன் பேசினார். இதையடுத்து TTV. தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து வி.கே. சசிகலாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் வி.கே. சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
இதனையடுத்து, நேற்று சேலத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். நீண்ட ஆலோசனை முடிவில் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக கூறி, ஏற்கனவே கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ” திமுகவின் B-டீமில் நான் இல்லை, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1 ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்படும் கொடநாடு விவகாரத்தில் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
2026-இல் அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்றேன். 2026-இல் அதிமுக தோற்றால் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் நான் பேட்டியளித்தேன். 1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5-ந் தேதி மனம் திறந்து பேசினேன்.
தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் செங்கோட்டையன் பேசுகையில், துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். அதிமுகவை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். இதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கம். தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 53 ஆண்டுகள் காலம் கட்சியில் இருந்த என்னை நீக்கியது கேள்விக்குறியானது. விதியின் கீழ் என்னை நீக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு வந்தார். அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அது அதிமுகவால் நடத்தப்படவில்லை. கட்சி சார்பற்ற விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறாக கருத்தை கூறினார் செங்கோட்டையன். அதன்பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கியபோது அவர் ஏற்கவில்லை. அந்த நேரத்தில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின், கருணாநிதி படம் தான் இடம்பெற்றிருக்கிறது. அதனால்தான் திமுகவின் பி டீம் என்கிறோம். சட்டசபையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. அதேபோல் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இல்லை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது செங்கோட்டையனுக்கு தெரியும். செங்கோட்டையனை நீக்கியது நான் எடுத்த தனிப்பட்ட நடவடிக்கை என்பது போன்று பேசக் கூடாது. செங்கோட்டையனை அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமான இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? நான் முதல்வரான பின்னர் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் நியமித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதுரை சோழவந்தானில் செய்தியாளர்களின் கேள்விக்கு TTV. தினகரன் பதிலளித்தார். அப்போது, ” எடப்பாடி பழனிசாமி அவர் அழிவை அவரே தேடிக் கொள்கிறார். அவர் வீழ்ந்து விடுவார். இப்போது இருப்பது அதிமுக அல்ல எடப்பாடி திமுக. செங்கோட்டையனை நீக்கும் அளவு பழனிசாமிக்கு தகுதியில்லை. தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வீழ்த்தப்படுவார். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தீவிரமான தொண்டன்; திறமையான நிர்வாகி.
அதிமுகவில் செங்கோட்டையனை விட சீனியர் யாரும் இல்லை நாளுக்கு நாள் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி வெறி சுயநலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2026 தேர்தல் தோல்வி அவருக்கு பதில் சொல்லும். நாங்கள் இல்லாமல் வெற்றி பெறுவோம் என சொன்ன அவர் 2024 மக்களவைத் தேர்தலில் ஏன் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது” என்றார்.