டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் வீட்டை விட்டு வெளியேறும் போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்புயுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக கூட்டணி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கின்றன. இதனுடன் தவெக, நாம் தமிழர் கட்சிகளும் போட்டியில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டனர். தவெக சார்பில் கூட்டணி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அதிமுக கடந்த காலங்களில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோரை வெளியேறிய நிலையில் 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனம் என்று நெருக்கடிகளால் சூழ்ந்துள்ளனர். இந்நிலையில், 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தனர். இந்த பரபரப்புக்கு இடையே, ஜான் பாண்டியன்,அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார்.

இந்த சூழலில்தான் பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை டெல்லிக்கு சென்றடைந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இரவு 8 மணியளவில் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்த நிலையில் சிவி சண்முகம், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்திற்கு உள்ளே செல்லும் போது எடப்பாடி பழனிசாமி டெல்லி காவல்துறையின் இரண்டு பாதுகாப்பு வாகனத்துடன் சென்றதாக கூறப்படும் நிலையில், முதலில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் சந்தித்து பேசியுள்ளனர். பிறகு நிர்வாகிகள் மட்டும் வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமி வரவில்லை.
அதிமுக நிர்வாகிகள் அமித் ஷாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியும் வெளியே சென்றதாக தெரியப்படுத்தும் வகையில் டெல்லி காவல்துறை வாகனமும் அவர்களுடன் விடுதிக்கு சென்றது. ஆனால் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் மற்றும் தமிழ் மொழிப்பெயர்ப்பாளரோடு அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை யாரையும் சந்திக்கவில்லை. காரின் பின் இருக்கையில் இருந்து பயணித்த எடப்பாடி, அமித் ஷா வீட்டை விட்டு வெளியேறும் போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.