அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அது நேற்றுடன் முடிந்த நிலையில் செங்கோட்டையன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கோபிசெட்டிப்பாளையத்தில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக கூட்டணி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கின்றன. இதனுடன் தவெக, நாம் தமிழர் கட்சிகளும் போட்டியில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டனர். தவெக சார்பில் கூட்டணி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அதிமுக கடந்த காலங்களில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோரை வெளியேறிய நிலையில் 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது.

இதனை தொடர்ந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனம் என்று நெருக்கடிகளால் சூழ்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். டிசம்பர் மாதத்திற்குள் அவர் தமிழக அரசியலில் ஏராளமான மாற்றங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி பயணம் சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ளனர்.
டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் சந்தித்தனர். இதையடுத்து அமித் ஷா இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். தமிழக அரசியல் களம், கூட்டணி, அதிமுகவில் உள்ள பிரச்சனைகள் ஆகியவை குறித்து அமித் ஷாவுடன் அதிமுகவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷா மட்டும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிமுக கூட்டணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியான அதே நேரத்தில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. “அதிமுகவை ஒன்றிணைப்பதற்காக அப்படி பேசினேன். புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.” என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். அவகாசம் முடிந்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.