விஜய் சினிமாவில் நூறு பேரை அடிக்கிறார். துப்பாக்கியை வைத்து சுடுகிறார். சாகசம் செய்கிறார். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா? விஜயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் பெயரில் நடத்தி வரும் ஆர்.ஜே.தமிழ் மணி அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளித்தார் . அப்போது,” திமுக அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை மறைக்க முதல்வர் ஸ்டாலின் எங்கள் மீது குறை சொல்வார். அவதூறு பேசுவார்.
இந்த ஆட்சியில் அமைச்சர் வீட்டிலேயே ரெய்டு நடப்பது வருந்தக் கூடியது. மடியில் கனம் இல்லையென்றால் அமலாக்கத் துறை சோதனைக்கு ஏன் பயப்பட வேண்டும். 2 ஜி அலைக் கற்றை ஊழலின் போது காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்தது தான் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் அதிமுகவுக்கு யாரை கண்டும் எந்த சோதனையை கண்டும் எந்த பயமும் இல்லை.
எங்கள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. வழக்குப் போடப்பட்டது. ஆனால் எங்களுக்கே பயமே கிடையாது. தற்போது திக்கு தெரியாத காட்டில் சிக்கியது போல திமுகவில் திருமாவளவன் சிக்கிவிட்டார். இப்போதெல்லாம் திருமாவளவன் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் போது எங்களை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் திருமாவளவன் ஜெயலலிதாவை பற்றி பேசுகிறார். ஜெயலலிதாவை பல மடங்கு புகழ்ந்து பேசிய திருமாவளவன் இப்போது திடீரென்று பேசியது எதனால என தெரியவில்லை.
திருமாவளவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என தெரியவில்லை. மதுரையில் நடைபெறும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவாக இருப்போம். மதுரையில் விஜய் மாநாடு நடத்துகிறர். எங்களை பொருத்தவரை விஜய் மட்டுமல்ல மதுரையில் யார் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த பெரிய நடிகர் மாநாடு நடத்தினாலும் கட்சி நடத்தினாலும் பாதிப்பு எங்களுக்கு இல்லை. டி.ஆர். ராஜேந்திரன் ஏன் விஷால் கூட கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். எத்தனை நடிகர் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை.
பேட்டரி கமலஹாசன் கட்சி தொடங்கினார். ஆனால் இப்போது காணாமல் போய்விட்டார். கமலஹாசன் எம்.பி.பதவிக்காக போனார் என சொல்ல மாட்டேன். வேற டீலிங் ஏதோ உள்ளது. விஜய்யை மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கியதை போல தான் நினைக்க முடியும். நடிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது. சினிமாவில் நூறு பேரை அடிக்கிறார் விஜய். துப்பாக்கியை வைத்து சுடுகிறார். சாகசம் செய்கிறார். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா? சினிமா ரசிகர் கூட்டம் என்பது வேறு? அவர் மக்களுக்கு என்ன சேவை செய்திருக்கிறார். அவரது வரலாறு என்ன? எம்ஜியாருடன் நடிகர் விஜயை ஒப்பிடுவது தவறு” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.