மக்கள் கிட்ட வரக்கூடாது என்றால் நீங்கள் எப்படி அரசியல் செய்வீர்கள்? விஜய் ரேம்ப் வாக் செய்யும் மேடையை சுற்றி உள்ள கம்பி, அந்த கம்பிகளில் க்ரீஸ் தடவப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சுமார் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் விஜய் மக்களைச் சந்தித்துப் பேசும் வகையில் மிகப்பெரிய மேடை மற்றும் ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிவைதொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக 6 பார்க்கிங் வசதிகளுடன் மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகளுடன் மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கவுள்ளது.
அதேபோல் தவெக தலைவர் விஜய், மாநாட்டுத் திடலில் தவெக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக 100 அடியில் கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநாட்டையொட்டி, பேனர் வைக்கும் பணியில் தொண்டர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற இனாம்கரிசல் குளம் பகுதியில் பேனர் வைப்பதற்காக 19 வயதான கல்லூரி மாணவர் காளீஸ்வரன் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம் மாநாட்டின் முன் பகுதியில் கிரேன் மூலமாகக் கொடிக் கம்பத்தை நடும் பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் திடீரென கிரேன் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றை இணைக்கும் பெல்ட் கழன்றது. இதனால் கொடிக்கம்பம் சரியத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த அனைவரும் பதறி ஓடினர். தொடர்ந்து 10 டன் எடை கொண்ட கொடிக்கம்பம் சாய்ந்து அங்கு நின்றிருந்த இன்னோவா கார் மீது விழுந்ததில், அதன் மேல் பாகம் மொத்தமாக நொறுங்கியது. விஜய் கொடியேற்றவிருந்த கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது அக்கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் பறக்க, “மக்கள் விரும்பும் முதல்வர்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அணிவகுத்து நிற்க, மாநாட்டு திடலுக்கு நள்ளிரவில் இருந்தே தொண்டர்கள் குவிய தொடங்கினர். சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டு சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேடை நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மேலே மேற்கூரை போடப்படவில்லை. ஆகையால், தொண்டர்கள் பலரும் கடுமையான வெயிலில் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் செய்ய உள்ளார். அந்த மேடையை சுற்றி உள்ள கம்பி வழியாக மக்கள் வரக்கூடாது என்று அங்கே க்ரீஸ் தடவப்பட்ட உள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ரசிகர்கள் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதென்ன வனவிலங்கு சரணாலயமா? அங்கேதான் விலங்குகள் வெளியே வரக்கூடாது என்று கம்பி போடுவார்கள். இங்கே பாதுகாப்பிற்கு கம்பி போடுவது இருக்கட்டும்.. அதில் என்ன க்ரீஸ் தடவுகிறார்கள்.இதெல்லாம் தவறு. இந்த ஐடியா எல்லாம் விஜய்க்கு யார் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்களை கேவலமாக நினைத்து இப்படி செய்கிறார்கள்.
மக்கள் கிட்ட வரக்கூடாது என்றால் நீங்கள் எப்படி அரசியல் செய்வீர்கள்? நீங்கள் எப்படி மக்களோடு மக்களாக இருப்பீர்கள்? மக்கள் ரேம்ப் வாக் நடக்கும் இடத்திற்கு வரக்கூடாது என்றால்.. நீங்கள் ஏன் முதலில் ரேம்ப் வாக் செய்யவேண்டும். இதெல்லாம் ரொம்ப தவறான செயல். நாங்கள் வெயிலில் நிற்கிறோம். தண்ணீர் கூட இல்லை. நாங்கள் என்ன இந்த கம்பியில் சீறி பாய்ந்து விடுவோமா? இப்படி எல்லாம் செய்தால் நாங்கள் உடைத்துவிட்டு போவோம். இதெல்லாம் தவறானது.. வன்மையாக கண்டிக்கிறோம் என தவெக தொண்டரின் குமுறலாக உள்ளது