திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணைந்த நிலையில் அந்த கூட்டணியை மக்கள் நல கூட்டணி என தவெக தலைவர் விஜய் கிண்டல் செய்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தவெக எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் இன்றைய தினம் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை அளித்த விஜய், வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இதில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கிலும் விஜய் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் என சொன்னார்கள்.
ஆனால் என்னை பொருத்தமட்டில் மக்களை காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பம். பெரிய பேக்கிரவுண்ட் இல்லை என சொல்வார்கள். கூட்டம் சேர்ந்தால் ஓட்டாகுமா, சீட்டாகுமா என்றெல்லாம் கேட்பார்கள். இங்கு இருப்போர் சாதாரண குடும்பத்தினர் அல்ல, அரசியல் தெரிந்தவர்கள்தான். எனவே அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள் கிடையாது. எம்எல்ஏன்னா சும்மா இல்லை. எல்லை காப்பானாக இருக்க வேண்டும். எம்எல்ஏ என்றால் தொகுதிக்கான எல்லைக்கான மக்கள் காப்பாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைதான் நான் தேர்வு செய்துள்ளேன்.
அவர்களுக்கு ஒன்று தான் இந்த தேர்தல் எல்லாரும் சொல்வது போல் 4 முனை, 400 முனை எல்லாம் கிடையாது. இரு முனை போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் இந்த தேர்தல்! அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரு, மக்கள் நலக் கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்கதான இருக்குது! ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சதாலயோ என்னவோ ஸ்டாலின் சார், மக்கள் நல கூட்டணியாகவே மாத்திட்டாரு. உடைந்த கிளாஸை ஒட்ட வைத்த மாதிரி, கிழிந்த துணியை தைச்ச மாதிரி, இது ஒரு ஒட்டு போட்ட ஒரு கூட்டணி அவ்வளவுதான்! அதனால் நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பது போல் உங்களது ஓட்டை சிந்தாம, சிதறாம நமது தவெக வேட்பாளர்களுக்கும் விசில் சின்னத்திற்கும் தயவு செய்து ஓட்டு போட்டுடுங்க! என விஜய் பேசினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தேமுதிக, ஜி.கே.வாசன் ஆகிய கட்சிகள் இணைந்ததே மக்கள் நல கூட்டணி. இந்த கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று களம் கண்டது. ஆனால் இந்த கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தனர். ஏற்கனவே விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக இருந்து வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்ததால் மக்கள் நல கூட்டணி என விஜய் விமர்சித்துள்ளார்.