தாய்மாமன் சீர் என்பது மதுரை வட்டாரங்களில் பெரிய பாரம்பரியமாகும். மதுரையில் 5 டிராக்டர்களில் பொருட்கள், பணமாலைகள், 50 பவுன் நகை மற்றும் ரூ.22 லட்சம் உள்பட ரூ.2 கோடிக்கு தாய்மாமன்கள் சீர்வரிசை கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்கள். மதுரை அழகப்பன் நகரை அடுத்த முத்துப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி திண்டுக்கல் மாவட்டத்தை ரம்யா அரசுப்பள்ளி ஆசிரியை ரம்யா. ரம்யா விக்னேஷ் தம்பதிக்கு ஆதேஷ் விக்ரம் என்ற ஒரு மகனும் , சாய்ஸ்ரீ என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்க்ள.

மதுரை அடுத்த முத்துப்பட்டியில் உள்ள மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்பு காதணி விழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவில் ஆசிரியை ரம்யாவின் சகோதரர்களான திண்டுக்கலை சேர்ந்த ரஞ்சித்குமார், ராஜபாண்டி ஆகிய இருவரும் தாய்மாமன் சீர்வரிசையை கொண்டு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை கண்டு அந்த பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
அண்ணன் தம்பிகள், தங்களுடைய தங்கையின் குழந்தைகளுக்கு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழ வகை தட்டுக்கள், முந்திரி, பிஸ்தா, பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் மற்றும் ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் என 1,130 பொருட்களை 5 டிராக்டர்களில் கொண்டு வந்து இருந்தார்கள்.

இது தவிர 2 கிடாய்கள், குழந்தைகளுக்கு 50 பவுன் நகைகள், ரூ.500 நோட்டுகளுடன் கூடிய பணமாலை, ரூ.200 நோட்டுகளுடன் கூடிய பணமாலையையும் கொண்டு வந்தார்கள். இந்த பணமாலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் ரூ.22 லட்சம் ரொக்கத்தை மொய்யாகவும் வழங்கி இருக்கிறார்கள்.
குழந்தைகள் ஆதேஷ் விக்ரம், சாய்ஸ்ரீ ஆகிய இருவரையும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் 3 மணி நேரமாக அந்த பகுதி வீதிகளில் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்கள். அத்துடன் வண்டியின் முன்பு கேரள செண்டை மேளம், வாடிப்பட்டி உருமி மேளம், நாக்பூர் டோல் மேளம் முழங்கின. பட்டாசுகளின் வாணவேடிக்கையும் முத்துப்பட்டி கிராமத்தையே மிரள வைத்தது.

இந்த தடபுடல் சீர்வரிசை ஊர்வலம் குறித்து குழந்தைகளின் தாய்மாமன்கள் கூறுகையில், “தாய்க்கு இணையானது தாய்மாமன் உறவு. கிழக்கு சீமையிலே படத்தில் வரும் ‘மானூத்து மந்தையில் மாங்குட்டி பெத்த மயிலே.. தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி, அவன் தங்க கொலுசு ஒன்னு தாராண்டி.. சீரு சுமந்த சாதி சானமே.. ஆறு கடந்தால் ஊரு வருமே’ தாய்மாமன் பாட்டை கேட்டவுடன் எங்களுக்கு கண்ணீர்தான் வரும்.
எனவேதான் சுமார் ரூ.2 கோடி செலவு செய்து தாய்மாமனின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வண்ணம் இந்த ஊர்வலத்தை நடத்தியிருக்கிறோம். நம் பாரம்பரியத்தை மக்கள் தெரியும் வண்ணம் இந்த விழாவை நடத்தி உள்ளோம்” என்றார்கள். ஆசிரியை ரம்யா கூறும்போது, “என் அண்ணன்கள் ஊரே வியக்கும் வண்ணம் சீர்வரிசை கொண்டு வந்ததை நினைத்து நெகிழ்ந்துவிட்டேன்” என தாய்மாமன்கள் தெரிவித்தனர்.