சென்னையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தாத நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பெருநகரத்தில் தெரு நாய்கள் மட்டும் இன்றி போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால், வளர்ப்பு நாய்களால் சிறுவர் சிறுமிகள் முதல் இளைஞர்கள் முதியவர்கள் வரை கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பலரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், பிட்புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாயினங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது கட்டாயமாக வாய்மூடி அணிவிக்க வேண்டும். வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும். உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே முழுப் பொறுப்பு. சென்னையில் சுமார் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 11,000 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. சென்னையில் 12,500 பேர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதத்திலிருந்து, வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயமாகும். இதற்காக 2 லட்சம் மைக்ரோ சிப்கள் வாங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு விரைவில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். நாய்களுக்கு தடுப்பூசி போட வரும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படவில்லையெனில், முதலில் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்.
அதையும் மீறி மைக்ரோ சிப் பொருத்தவில்லை என்றால், நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும். மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள், அதற்கென உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்படும் என சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.