கட்சியில் இரு தரப்பு என்ற பேச்சே இல்லை. அது ஒரு கும்பல்.. அந்தக் கும்பல் ஏதேதோ சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். வடமாவட்டங்களில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் தமிழக அரசியலில் மிக முக்கிய கட்சியாக பாமக இருக்கிறது. அந்த பாமகவில் இப்போது உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது.
அங்குக் கடந்த சில ஆண்டுகளாகவே அன்புமணி தரப்புக்கும் ராமதாஸ் தரப்புக்கும் இடையே மோதல் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் ராமதாஸ், அன்புமணி மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதனால் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
இதற்கிடையே கோட்டூர்புரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்தார். அப்போது, “தெருக்கூத்தில் பல வேஷங்கள் போடுவார்கள். பல நடிகர்கள் அந்த வேடங்களை நடிப்பார்கள். அதுபோலத் தான் இப்போது ஒரு தெருக்கூத்து நடக்கிறது, நீங்களும் பாருங்கள்” என்று சொன்னார். ஜிகே மணி உங்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, “அதெல்லாம் பரம ரகசியம் உங்களிடம் சொல்லக் கூடாது”.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவே ஜிகே மணி டெல்லி சென்றுள்ளதாகச் சொல்கிறார்களா என்று கேட்டதற்கு, “அது குறித்தும் உங்களிடம் சொல்லக் கூடாது. எல்லாம் ரகசியம்” . மேலும் இரு தரப்பும் மாறி மாறி மனு கொடுக்கிறீர்களே என்ற கேள்விக்கு, “கட்சியில் இரு தரப்பு என்ற பேச்சே இல்லை. அது ஒரு கும்பல்.. அந்தக் கும்பல் ஏதேதோ சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வரை எல்லாம் இந்தப் பிரச்சினை போகாது. எங்கள் கட்சித் தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நேற்று முன்தினம் சுமார் 250 கட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். எல்லாரும் தெளிவாக இருக்கிறார்கள்”.
பாமகவின் முக்கிய தலைவரான ஜிகே மணியையே நீக்கச் சொல்லி அவர்கள் மனு கொடுத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்களா, “அதான் சொன்னேனே தெருக்கூத்து நடக்கிறது. வேடிக்கை பாருங்கள்.. அதில் எல்லா கேரக்டரும் வரும் பஃபூன் கூட வரும்” என்றார். மேலும், கூட்டணி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்விக்கு, “கூட்டணி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வரும். நானே கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பேன்” என ராமதாஸ் தெரிவித்தார்.