மதுரை மாநகராட்சி சமுதாயக் கூடத்தை கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மின் இணைப்பு முதற்கொண்டு தனி நபர் பெயருக்கு மாற்றி, தனியார் மண்டபம் போல் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்ததை மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் நிர்வாகப் பொறுப்பையும், பராமரிப்பையும் அந்தந்த பகுதி உதவிப் பொறியாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகின்றது. இது போன்ற சில சமுதாயக்கூடங்கள், மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமலேயே பொது மக்களுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும், அதன் பின்னணியில் அப்பகுதியில் செல்வாக்கு படைத்த அரசியல் கட்சியினர் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இதுபோன்ற சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சியினரின் பிடியில் இருந்து மீட்டு, மீண்டும் மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா கொண்டுவந்து கொண்டு இருக்கிறார். இதற்காக ஆணையர் சித்ரா ஆய்வு மேற்கொண்டபோது, மண்டலம்-3-ல் உள்ள 54-வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் ஒன்று, கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திலேயே இல்லாமல் இருந்ததும், அதன் வருவாய் மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
அதனடிப்படையில் தெற்கு வெளி வீதி அருகே குப்புபிள்ளை தோப்பு 2-வது தெருவில் உள்ள அந்த மாநகராட்சி சமுதாயக்கூடத்தை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் ஒருவர் அந்த சமுதாயக்கூடத்தின் மின் இணைப்பையே தனி நபர் பெயருக்கு மாற்றி, தனியார் மண்டபம் போல் அவரே நிர்வாகம் செய்து வந்ததும் தெரியவந்தது. ஆணையர் சித்ரா, உடனடியாக அந்த சமுதாயக் கூடத்தை மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றார்.