திருநெல்வேலியில் கல்லூரி மாணவி பெற்றோரின் எதிர்ப்பை மீறி வரும் 6 -ந் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அழைப்பிதழ் கொடுப்பதற்கும் நிலையில் திடீரென மரணம். காதலியை ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காதலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்த திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் வரும் பட்சிராஜன். இவரது மனைவி ரேவதி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் திருமணம் ஆகி காரைக்குடியில் தபால் அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவர்களது 2 வது மகள் சிவமதி, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். சிவமதிக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பேட்டை கடசர் தெருவை சேர்ந்த ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றி வரும் ஆனந்த கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பெண்ணின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் – சிவமதி திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். சிவமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி வரும் 6 ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அழைப்பிதழ் கொடுப்பதற்கும் ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் மகளின் திருமணம் தங்களுக்கு தெரியாமல் நடக்க இருப்பதை கேள்விப்பட்டு மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிவமதி நேற்று மாலை சிவமதி தூக்குப்போட்டதாக கூறி அவரது பெற்றோர் பழைய பேட்டை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட சிவமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி சிவமதி கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து இதனை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், ‘காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிவமதி வீட்டில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு கொண்டார்’ என்று கூறினர். இதற்கிடையே சிவமதி உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிவமதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாக கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிவமதி பெற்றோர் மீதும் புகார் அளித்தனர். இதனால் சிவமதி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ஆணவ கொலையா? என்பதை விசாரிக்க திருநெல்வேலி டவுன் உதவி காவல் ஆணையர் விஜய குமார் நேரடி விசாரணை நடத்த காவல் ஆணையர் மணி வண்ணன் உத்தரவிட்டார்.