மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து உதவி ஆணையர் முதல் பில் கலெக்டர்கள் வரை 28 பேர் வரை இடைநீக்கம் செய்து மிக நேர்மையாக செயல்பட்ட ஆணையர் சித்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியின் 71-வது மாநகராட்சி ஆணையராகவும், முதல் பெண் ஆணையராகவும் சித்ரா கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி பொறுப்பேற்றார்.
சித்ரா ஆணையராக பொறுப்பேற்ற போது, மாநகராட்சி மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும், பல்வேறு நிர்வாக சிக்கல்களிலும் தவித்து வந்தது. கடந்த 2021-ந் ஆண்டு முதல் 2025 வரை 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். ஆணையர் சித்ரா, அனைத்து அரசியல் சூழ்நிலைகளையும் சமாளித்து ஒன்றரை ஆண்டுக்கு மேல் பணிபுரிந்ததோடு, வெறும் புகாரோடு நின்ற மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை வெளிக்கொண்டுவந்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர்கள் வரை 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் செய்தார்.
அதோடு வணிக வரிக்கு பதிலாக குடியிருப்பு வரி செலுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வந்த 200 திருமண மண்டபங்களை கண்டறிந்து, அந்த கட்டிடங்களை வணிக வரிக்கு மாற்றி, மதுரை மாநகராட்சிக்கு 10 முதல் 13 சதவீதம் சொத்துவரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும், மாநகராட்சி பள்ளிகள் மேம்பாடு, சுகாதாரம், பொறியியல், வருவாய் பிரிவுகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும் கண்டறிந்து மாநகராட்சி வருவாயை பெருக்கினார்.
கிடப்பிலிருந்த முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வண்டியூர் கண்மாய் பூங்கா சுற்றுலா திட்டம், ராஜாஜி பூங்கா சீரமைப்பு போன்ற பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுத்தார். தவெக ஆட்சிக்கு வந்தநிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்படும் நிலையில் நேர்மையாகவும், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் சித்ராவும், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.