தென்மாவட்டங்களில் தொடரும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் உடனடியாக ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வரும் பட்டாலியன் காவல்துறையில் சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் – சரவணன், கிருஷ்ணகுமாரி தம்பதி இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், சுபாஷினி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக சரவணக்குமார்- கிருஷ்ணகுமாரி தம்பதி திருநெல்வேலியில் இருந்த போது, சுபாஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.

அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வ கணேஷ் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் செல்வ கணேஷ் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது சுபாஷினியை சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷினி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கவின் செல்வ கணேஷ், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கவினின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சுர்ஜித்தின் பெற்றோரின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முக்காணி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, மூன்று மணி நேரமாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.கவினின் உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட்ட பின்னரே கவினின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பையும், சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்த ஆணவக் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, சுர்ஜித்தின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 27 வயதான இளைஞர் கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படுகொலையை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கவின் செல்வ கணேஷ் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தவர். இவரும் தற்போது சித்த மருத்துவராக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுபாஷினி என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இதற்கு சுபாஷினியின் பெற்றோர்கள் ஒப்புதல் தராமல் தூத்துக்குடி வீட்டை காலி செய்துவிட்டு திருநெல்வேலிக்கு குடி பெயர்ந்ததாகவும் தகவல்கள் உள்ளன. சுபாஷினியின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரும் முறையே ராஜபாளையம், மணிமுத்தாறு பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
கவின் செல்வகணேஷின் தாத்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுபாஷினியிடம் கலந்தாலோசிக்க அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு கவின் செல்வகணேஷ், அவரது தாயார், தம்பி, மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சுபாஷினியின் சகோதரனான சுஜித், தனது பெற்றோர் பேசுவதற்கு அழைத்ததாக கூறி கவின் செல்வகணேசை வீட்டு வாசலில் அரிவாளால் சராமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுஜித் மற்றும் அவரது தந்தை- தாய் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தாலும் சுஜித்தை மட்டுமே கைது செய்துள்ளனர். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் நிகழ்வதும், குறிப்பாக தென்மாவட்டங்களில் வன் படுகொலைகள் அதிகரித்து வருவதும் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே இருக்கிற கிரிமினல் சட்டங்களே போதுமானது என்கிற அரசின் வாதத்தை தொடர்ந்து நடந்தேறும் சாதி ஆணவக் கொலைகள் புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன.
எனவே, தென்மாவட்டங்களில் தொடரும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் உடனடியாக ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும், படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.