“அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறோம். ‘டம்மி வாய்ஸ்’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
அப்போது, “பாஸ்டாக்குக்கு தமிழக போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது. டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து மானியம் கொடுத்து, அதை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல்வர் செய்யவேண்டிய வேலையை செய்யாததால் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இங்கேதான் இருக்கிறது. எதற்கு ஓரணியில் பயணம் செய்யவேண்டும். எப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததோ, அப்போது இருந்தே முதல்வருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயமும் வந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி பேசுகிறார்கள். அம்பாசமுத்திரத்தில் 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் 17 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். தினசரி இதுபோன்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிக்கிறது. இதை மறைக்க முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஊர், ஊராக செல்கிறார். இதில் எந்த நன்மையும் இல்லை.
இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சியாக திமுக உள்ளது. நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ தான் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசவேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.